Pages

29 November 2009

கால நேரம் !

நெருப்பில்லாம புகையாது! ரொம்பக்காலமா ஜனங்க கிருத்திரமமா பொரணி பேச்சுக்கு வலுவூட்ட சொல்லிட்டிருந்த பழமொழி பொய்னு ஆகிப்போச்சு போல. ஆமாங்க, மின்காந்த அடுப்பு (Induction Stove) வந்துடுச்சாம். நெருப்பே இல்லாம சமைக்குமாம்.


எனக்கு சிப்பு சிப்பா வருது. பின்ன என்னங்க? ஊருக்கு போய் இருக்கும்போது பார்த்திருக்கேன். ஒல்லிக்குச்சிக்  கிழவி, அதான் எங்க பாட்டி ஒத்த ஆள கிட்ட சேர்க்காது. தனியா, விறகு, சுள்ளி என்னமோ வெச்சி ஒரு 25 பேருக்கு கிட்ட சமைக்கும்.  அம்மில ஓட்டி ஓட்டி அரைக்கிற அழகிருக்கே. சும்மா வலயப்பட்டி தவில் கணக்கா தேங்கா நசுக்கற சத்தமும், அரைச்சு முடிச்சி நட்டுகுத்தா குழவிய சுத்தி, ஒரு விரல மடக்கி மேல இருந்து வழிக்கிற அழகும் இருக்கே. அரைச்ச தடமே இருக்காது.

சமையலோட வாசனை மெது மெதுவா நாசிய நெருடி சமையலறை பக்கமா இழுக்கும். அடுப்ப‌டியில‌ கெட‌ந்து சாவுறேன்னு முன‌கின‌தும் இல்லை. தீஞ்சி போன‌து, பொங்கி வ‌ழிஞ்ச‌துங்கற வ‌ர‌லாறும் இல்லை. விசுக்கு விசுக்குன்னு போய்ட்டு வந்து, விரட்டி, நடுவில ரெண்டு வாண்டுக்கு குளிப்பாட்டின்னு ஏதோ பண்ணிகிட்டு, சாப்பிட வாங்க பசங்களான்னு குரல் விடுறப்போ வயத்துல பசி ரெடியா இருக்கும்.

வந்தவங்க வழிச்சி நக்கிட்டாங்கன்னு, கொஞ்சம் இருங்க சாதம் 2 நிமிஷத்துல ஆயிடும்னோ, பொரியல் தீந்து போச்சின்னோ, குழம்பு ரசமெல்லாம் விளாத்துற வேலையோ கிடையாது. உப்பு தூக்கல், புளி அதிகம்னு ரிப்பேர் வேலையே கிடையாது.

பொழ‌ப்புன்னு ப‌ட்டிண‌ம் வ‌ந்தும், விற‌கு அடுப்பு கூடாதுன்னு க‌ண்டிஷ‌ன்ல‌தான் வீடுகிடைக்கும்னு ஆன‌ பொழுது கூட‌ கும‌ட்டி அடுப்பில் க‌ரி போட்டு ச‌மைய‌ல் நடக்கும். அப்ப‌வும் அம்மிதான். உர‌ல்தான். ச‌மைய‌ல் என்ன‌மோ அதே நேர‌ம்தான் எடுக்கும்.  ஒரு நாள் காட்டு க‌ரியை விட‌ லீக்கோ க‌ரி ரொம்ப‌ சூடு, கொஞ்ச‌மா ஆகும், விலை க‌ம்மி, சேமிப்புன்னு க‌தை விட்டான். சாம்ப‌ல் இல்லைன்னு அள‌ந்தான். அப்ப‌வும் சமையலுக்கு அதே நேர‌ம்தான்.

அப்புற‌ம் கெர‌சின் வ‌ந்திச்சி. வ‌த்தி ஸ்ட‌வ்வுன்னாங்க‌. ஜ‌ன‌ங்க‌ல்லாம் பாய்ஞ்சிகிட்டு அந்த‌ ப‌க்க‌ம் போன‌து. அந்த‌ வாச‌னை புடிக்க‌ல‌ன்னு முன‌கிக்கிட்டே அதுல‌ தான் ச‌மையல்னு மாறினாங்க‌. பாத்திர‌மெல்லாம் க‌ரி புடிச்ச‌து. செங்க‌ல் பொடி, புளின்னு தேயோ தேய்னு தேய்ச்சி கூடுத‌ல் வேலையாச்சி. ச‌மைய‌ல் என்ன‌மோ அதே நேர‌ம்தான்.

அப்புற‌ம் ப‌ம்ப் ஸ்ட‌வ் வ‌ந்துடிச்சி. க‌ரிபுடிக்காதுன்னு விள‌ம்ப‌ர‌ம். அதுக்கு பின்னு, ப‌க்க‌த்துல‌யே ஆளு இருக்க‌ணும். இல்லைன்னா தீய்ஞ்சிடும், பொங்கிடும். மேல‌ கொதிக்கிற‌ப்ப‌ ப‌ம்ப் ப‌ண்ணி அது சிந்திக் காய‌ம். இப்ப‌டி ப‌ல‌ பிர‌ச்சினைக‌ள் வ‌ந்தும் ச‌மைய‌ல் அதே நேர‌ம். இதனால கொஞ்ச மருமகள்கள் உயிர் போனதும் கூடுதல் பலன்.

பிற‌கு இண்டியன் ஆயில் நிறுவனம் ஒரு வ‌த்தி ஸ்ட‌வ் கொண்டு வந்து, அதுக்கு டில்லிக்கு போற‌வ‌ங்க‌ கிட்ட‌ சொல்லி, காத்திருந்து காசு மேல‌ குடுத்து வாங்கின‌து. ஒரு மாறுத‌லும் இல்லை. பிற‌கு, கேஸ், அதுக்கு காத்திருத்த‌ல், ப்ர‌ஷ‌ர் குக்க‌ர், மிக்ஸி, க்ரைண்ட‌ர், 2 பர்ன‌ர் போதாதுன்னு 4 ப‌ர்ன‌ர் ஸ்டவ்வு, குக்கிங் ரேஞ்ச், எலெக்ட்ரிக் ஸ்ட‌வ், எலெக்ட்ரிக் குக்க‌ர், மைக்ரோ வேவ்னு வந்துச்சி.

புகை போக்க என்னமோ மிசினு வேற எலக்ட்ரிக் சிம்னின்னு வந்துடுச்சி காசு புடுங்க போதாம‌ இப்போ இன்ட‌க்ஷ‌ன் ஸ்ட‌வ்வாம். அதுக்கு த‌னியா பாத்திர‌ங்க‌ள் வாங்கணுமாம். விளம்பரம் பார்த்தா சமைக்கப் போறேன்னு சொல்ற நேரத்துல சமைச்சிடலாமாம். தீச்சுட்ட காயம் இருக்காதாம்.

விளம்பரத்துல சொல்லாம விட்டது என்ன தெரியுமா. இதய நோய்க்கு பேஸ்மேக்கர் கருவி, டெஃபிப்ரிலேடர் கருவி இது இருக்கிறவங்க இந்த அடுப்புகிட்ட போனா அது தாறுமாறாயிடுமாம். கையில போட்டிருக்கிற மோதிரம், இப்பதான் நீளமா செயின் போடுறாங்கள்ள அதெல்லாம் சூடாயிடுமாம். ஈர பெயிண்டுன்னாலே தொடாம நம்பமாட்டான் நம்மாளு. இது என்னாதுன்னு தடவி பார்த்து கை பொரிஞ்சி போகும்.

நிஜ‌ம்மா சொல்லுங்க‌! அன்னைக்கு அடுப்ப‌டில‌ செல‌வுப‌ண்ண‌ நேர‌த்துல‌ இதெல்லாம் வ‌ந்து ஏதாவ‌து ப‌ல‌ன் இருக்குன்னா எப்ப‌டி ஃபாஸ்ட் ஃபுட், இன்ஸ்ட‌ன்ட் ஃபுட் எல்லாம் பிச்சிகிட்டு ஓடுமா? அப்போ விறகுல சமைச்சவங்கள விடுங்க. கிரசின் அடுப்பில இருந்து கேஸ் வாங்கினவங்க எவ்வளவு மிச்சம் புடிச்சாங்க. கேஸ்ல இருந்து மைக்ரோவேவ் வரைக்கும் படிப்படியா மாறினவங்க சேமிச்சது என்ன?

இன்னும் கிராம‌த்தில‌ வேர் இருக்கிற‌வ‌ங்க‌ ம‌ண்பானைத் த‌ண்ணி, ம‌ண் ச‌ட்டில‌ செய்த‌ சாப்பாடு, க‌ல்ச‌ட்டிக் குழ‌ம்புன்னு ஏங்காம‌ இருக்கோமா?சமைக்கிற உணவிலதான் ருசியும் ஆரோக்கியமும் இல்லையா? இல்ல முறையில இல்லையா? மிஞ்சி மிஞ்சிப் போனா சமைக்கிறதுக்கு ஒரு மணிநேரம் ஆகுமா? இதையும் சுருக்கி அந்த நேரத்துல இன்னோரு சீரியல் பார்க்கலாமா?

இதுக்கு ஒரு பட்டி மன்றம் வைக்கிற அளவுக்கு விஷயம் இருக்கு. அதெல்லாத்தையும் மீறி அவிய்ங்க வீட்டில இருக்கு. நம்ம வீட்டில இல்லைன்னா கௌரவக் குறைச்சலுங்கிற காரணம் தேவையோ தேவையில்லையோ, இதெல்லாம் வந்துகிட்டேதான் இருக்கும்.

2 comments:

Paleo God said...

//விளம்பரத்துல சொல்லாம விட்டது என்ன தெரியுமா. இதய நோய்க்கு பேஸ்மேக்கர் கருவி, டெஃபிப்ரிலேடர் கருவி இது இருக்கிறவங்க இந்த அடுப்புகிட்ட போனா அது தாறுமாறாயிடுமாம்.//

தெரியாத விஷயம் ... எச்சரிக்கைக்கு நன்றி... sir

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அந்த காலத்தில் சிரத்தையுடன் விறகடுப்பில்
சமைத்து, அன்புடன் பரிமாறப்பட்ட உணவின்
சுவை, இந்த காலத்து விளம்பர இடைவெளியில்
'மைக்ரோ வேவ் அவனி'ல் சமைக்கப் படும்
உணவில் கிடைக்குமா ?

Post a Comment